ராய்ப்பூர்: பாஜகவில் இணையும் திட்டம் தனக்கு இல்லை என்றும், அந்தக் கட்சிக்கும் தனக்கும் கொள்கை ரீதியாக ஒத்துப்போகாது என்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான சிங் தியோ தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சிங் தியோ. முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவர். எனினும், பூபேஷ் பெகல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சிங் தியோ அமைச்சராக்கப்பட்டார். பூபேஷ் பெகல் முதல்வரானது முதல் அதிருப்தியில் இருந்த சிங் தியோவை சமாதானப்படுத்தும் நோக்கில், இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என காங்கிரஸ் தலைமை கூறி இருப்பதாக ஆரம்பத்தில் செய்தி வெளியானது.
எனினும், காங்கிரஸ் தலைமை இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பூபேஷ் பெகல் இதற்கு உடன்படாததால் அவரே முதல்வராக தொடர காங்கிரஸ் முடிவெடுத்ததாகத் தகவல் வெளியானது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகலாம் என்ற கனவில் இருந்த சிங் தியோவுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அவர் காங்கிரஸ் கட்சி மீதான தனது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்பாக அவர் பாஜகவில் இணைவார் என செய்திகள் வெளியாகின. அதற்கு சிங் தியோ இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது கொள்கையும் சித்தாந்தமும் பாஜகவின் கொள்கையோடு ஒத்துப்போகாது என தெரிவித்துள்ள சிங் தியோ, எனவே, தான் ஒருபோதும் பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
அப்படியானால் சொந்த கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சிங் தியோ, அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் சொந்த கட்சி ஆரம்பிக்க வேண்டுமானால் அதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். தனது அடுத்தகட்ட அரசியல் என்பது எதிர்காலத்தைப் பொறுத்தது என்றும் சிங் தியோ தெரிவித்துள்ளார்.