புதிய வெப் தொடர் அயலி: 26ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

கடந்த ஆண்டு விலங்கு, பிங்கர் டிப் 2, பேப்பர் ராக்கெட் தொடர்களை வெளியிட்ட ஜீ5 தளம் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடும் வெப் தொடர் அயலி. இதனை முத்துக்குமார் இயக்கியுள்ளார். இது 8 எபிசோட்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற 26ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

தொடரின் கதை இதுதான்: மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8ம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வியை சுற்றிய கதை. பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பாமல் உடனே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மிக்க வீரப்பண்ணை கிராமத்தில் பிறந்த தமிழ் செல்வி, தான் வயசுக்கு வந்ததை மறைத்து டாக்டருக்கு படிக்க திட்டமிடுகிறார். அது எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் கதை.

பெண்கள் படித்தால் கிராமத்து தெய்வமான அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள் தமிழ். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெற்றாளா? என்பதே இந்த தொடர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.