ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் Feb 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இடைதேர்தலுக்கான தேர்தல் அலுவலகமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் இலவச அழைப்பு எண் 180042594890 கொடுக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில 9 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்குள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் களம் காண இருக்கிறது. முன்பு தாமாக போட்டியிட்ட நிலையில் இப்போது அதிமுக நேரடியாக களம் காண இருக்கிறது. இதனை அதிமுக கூட்டணி கட்சியான தாமாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.