கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தனது வங்கிக் கணக்கில் செலுத்த முயன்றுள்ளார். கள்ள நோட்டு என்பதால், அந்தப் பணத்தை இயந்திரம் எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது. மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் கனிராஜ் செலுத்த முயன்றது தொடர்பான தகவலை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டுஅறைக்குத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கிக் கணக்கு எண்ணை வைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் செலுத்த முயன்ற கனிராஜை கேரள போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 76 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார், அழகர், திருமயத்தைச் சேர்ந்த பழனிகுமார், குமரலிங்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியில் வசித்து வருவதாக கேரள போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொழுமம் வந்த மறையூர் போலீஸார், அங்கு பிரபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 356, ஒரு பிரிண்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், வனத்துறை அதிகாரி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.