அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலத்தின் கம்பி அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மோர்பி நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், மோர்பி நகராட்சி நிர்வாகம் வரும் 25-ஆம் தேதிக்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அது நகராட்சி பொதுக்குழு தீர்மானம் போன்று இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு நிலையிலும் பாலம் தொடர்பாக மெத்தனமாக இருந்த காரணத்திற்காக நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, குஜராத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு அளித்த விளக்கத்தில் மோர்பி நகராட்சியை கலைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் இப்போது நகராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மோர்பி பாலத்தை இயக்குவதற்கான ஒப்பந்தம் 2017-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. 2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஓரீவா குரூப் மோர்பி நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. பாலத்தின் சிதிலமடைந்த நிலை பற்றி எச்சரித்துள்ளது. மேலும், பாலம் இருக்கும் நிலைமையில் அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டால் விபத்து நடக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் எதையும் நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை.
அது மட்டுமல்லாது 2017-ல் ஒப்பந்தம் முடிந்தபின்னர் அந்த நிறுவனத்திடமிருந்து பாலத்தின் கட்டுப்பாட்டை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலத்தின் நிலை தெரிந்தே மெத்தனமாக இருந்துள்ளது. நிறுவனமும் பொறுப்பை உரிய அதிகாரியிடம் ஒப்படை முற்படவில்லை. இருதரப்புமே பாலத்தின் தரத்தை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை.
இவையெல்லாம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையிலேயே மோர்பி நகராட்சி நிர்வாகத்தை ஏன் கலைக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீரமைப்புப் பணிகளில் ஓரிவா குழுமத்தின் சறுக்கல்களும் உள்ளன. டிக்கெட் விற்பனை, எத்தனை பேரை பாலத்தில் அனுமதிப்பது போன்று எதையுமே ஒரீவா குழுமம் கவனிக்கவில்லை என்று குஜராத் அரசு அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.