பிக்பாஸ் சீசன் 6 தமிழ் இந்தவாரத்துடன் முடிவடைய இருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் விக்ரமன், மைனா, அசீம், ஷிவின் உள்ளிட்டோர் வீட்டில் இருக்கின்றனர். வாரத்தின் தொடக்கத்தில் வந்த பணப் பெட்டியை, ஒரு சில நிமிடங்களிலேயே எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கதிரவன். 3 லட்சம் ரூபாய் ஆரம்ப தொகையுடன் வந்த பணப் பெட்டியை விட்டிருந்தால் இன்னும் தொகை அதிகரித்திருக்கும். ஆனால், அவர் அதனை செய்யாமல் உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். ஆனால், இன்னொரு டிவிஸ்டை வைத்தார் பிக்பாஸ்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் அடிக்கடி கூறுவதற்கு ஏற்ப, பிக்பாஸ் வீட்டில் வரலாற்றில் முதன்முறையாக 2வது முறையாக காஷ்பேக் பெட்டியை அனுப்பினார் பிக்பாஸ். இந்தமுறை நிமிடத்துக்கு 2500 ரூபாய் ஏறிக் கொண்டே இருக்கும் என அறிவித்தார். இந்த தொகையை எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவித்தார் பிக்பாஸ். இதுநாள் வரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அமுதவாணன், உரிய தொகை வந்ததும் எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என காத்திருந்தார்.
பணத்தின் மதிப்பு எகிறிக் கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் 13 லட்சம் ரூபாய் சேர்ந்தது. உடனே அந்த தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் அமுதவாணன். இதுவரை பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையுடன் வெளியேறிய முதல் போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு சிபி சக்கரவர்த்தி 12 லட்சம் ரூபாய் தொகையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் அமுதவாணன்.