புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், மத்தியஅமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது இந்த கூட்டத்துக்குள், வேகமாக வந்த வாகனம் ஒன்று உள்ளே புகுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் வாகனத்தின் டிரைவர் மற்றும் பாஜக தொண்டர்கள் இருவரை அடித்துக் கொன்றனர். அந்த வாகனத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார்.
அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கரிமா பிரசாத் வாதிடுகையில், ‘‘இந்த குற்றம் மிக கொடுமையானது. இதில் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால், அது சமூகத்துக்கு தவறான தகவலை தெரிவிக்கும்’’ என்றார்.
மனுதாரர் ஆசிஸ் மிஸ்ராவின் வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதிடுகையில், ‘‘மனுதாரர் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கு முடிய 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகும்’’ என்றார்.
இந்த விவாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.