சேலம், வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரின் மனைவி பழனியம்மாள். கடந்த 2022 டிசம்பர் 29-ம் தேதி இவரின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் மந்திரவாதி என்றும், எனக்கு சித்து வேலைகள் எல்லாம் நன்றாக தெரியும், உங்கள் வீட்டிற்குள் ஒரு மர்ம புதையல் ஒன்று மறைந்து இருப்பதாகவும், அதனை நீங்கள் எடுத்தால் நீங்கள் மிகப்பெரிய லட்சாதிபதியாய் இருப்பீர்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய பழனியம்மாள் உடனே அந்த புதையலை எடுத்து தருமாறு அந்த மர்ம நபரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், `புதையல் எடுக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் செலவாகும். சில ஆவிகளை எல்லாம் கூப்பிட்டு தான் இதை எடுக்கணும். ஆவிங்க சும்மா வராது. அதற்கு கொஞ்சம் காசு செலவு பண்ணினால் தான் அதுங்களும் வந்து எடுத்து கொடுக்கும்’ என்றுள்ளார்.

அதற்கு பழனியம்மாள் பணம் கொடுக்க சம்மதித்து ஒரு லட்சம் பணத்தை திரட்டி அந்த போலி சாமியாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை கையில் வாங்கியவர், `பொழுது சாய்ந்து விட்டது. இப்போது ஆவிகளை கூப்பிட்டால் வந்து புதையல் எடுத்து கொடுக்காது. காலையில் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனியம்மாள் வாழப்பாடி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியை சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் என்பது தெரியவந்தது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.