”என் குழந்தையை கடத்திவிட்டார்கள்”-நாடகமாடிய தாய்; விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் ஜானகி (32). திருமணமாகாத ஜானகி, அவரது தாய்மாமன் மூலம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கடந்த செப்டர்பர் 23 ஆம் தேதி ஜானகி, அவரது பெண் குழந்தையை, வழக்கறிஞர் பிரபு, அவரது தோழி சண்முகவள்ளி ஆகியோருடன் உத்தமர் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
image
இந்நிலையில், ஜானகியை கோயிலுக்கு வெளியிலேயே நிற்க வைத்து விட்டு, வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது தோழி சண்முகவள்ளி ஆகியோர் குழந்தையை கோயிலுக்கு கொண்டு செல்வது போல கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜானகி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி ஆகியோர் மீது குழந்தை கடத்தல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காத நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தில் ஜானகி வழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் குழந்தையையும் குழந்தையை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர்.
இதையடுத்து லால்குடி அருகேயுள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரின் மகன் வழக்கறிஞர் பிரபு (44) மற்றும் லால்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மனைவி சண்முகவள்ளி ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, ஜானகி தான் அவரது குழந்தையை விற்பனை செய்யச் சென்னாதாக கூறினர். இதைத் தொடர்ந்து ஜானகியிடம் போலீசார் விசாரணை செய்தபோது, ”எனது 7 மாத கருவை கலைக்க வழக்கறிஞர் பிரபுவிடம் சென்றேன். அப்போது, கருவை கலைக்க வேண்டாம். குழந்தை பிறந்ததும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.5 லட்சம் தருகிறோம் எனக் கூறினர்.
image
எனக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்தனர். அந்த பணத்தில் ரூ.80 ஆயிரத்தை மட்டுமே எனக்கு கொடுத்து விட்டு மீதி பணத்தை பிரபு மற்றும் அவரது தோழி சண்முகவள்ளி ஆகியோர் வைத்துக் கொண்டனர். பேசியது போல ரூ.3 லட்சம் கொடுக்காமல் குறைவாக பணத்தை கொடுத்ததால் குழந்தையை மீட்டுத்தர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தேன்” என  கூறினார்.
இதனடிப்படையில் குழந்தையை விற்பனை செய்த வழக்கறிஞர் பிரபு (44), குழந்தையின் தாய் ஜானகி, சண்முகவள்ளி (46), லால்குடி மணக்கால் பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் ஆகாஷ், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா, ஈரோடு பகுதியைச் சேர்ந்த சண்முகப்ரியா உள்ளிட்ட 6 பேரை லால்குடி போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் கீழ் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
image
இந்நிலையில், விற்பனை செய்த குழந்தையை மீட்க லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான சமயபுரம் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் டெல்லி சென்று குழந்தை குறித்து விசாரணை செய்தனர். இதையடுத்து குழந்தை விற்பனையின் முக்கிய நபரான டெல்லியைச் சேர்ந்த கோபிநாத் என்ற கோபாலகிருஷ்ணனையும் கைது செய்தனர். கைதான கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி விற்பனை செய்த குழந்தை கர்நாடாக மாநிலம் வெள்ளகாரா பகுதியில் உள்ள தம்பதியிடம் இருந்த நிலையில், குழந்தையை மீட்ட தனிப்படை போலீசார் திருச்சிக்கு கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து குழந்தையை விற்பனை செய்த வழக்கின் முக்கிய புள்ளியான டெல்லியைச் சேர்ந்த கோபிநாத் என்ற கோபாலகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்து, லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் கீழ் கோபாலகிருஷ்ணனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.