சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் கவிதா (50) (பெயர் மாற்றம்). இவர் அம்பேத்கர் நகர் 1-வது தெருவில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடையின் அருகில் சிக்கன் கடை நடத்தி வருபவர் முனுசாமி. கவிதாவுக்கும் முனுசாமிக்கும் கடை நடத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. மேலும் கவிதாவை அந்தத் தெருவில் டிபன் கடை நடத்தக்கூடாது என்று முனுசாமி கூறிவந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 18.1.2023-ம் தேதி கவிதாவுக்கும் முனுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கவிதாவை ஆபாசமாக திட்டிய முனுசாமி, கவிதாவைத் தாக்கியிருக்கிறார். மேலும் பிளேடால் கவிதாவை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கவிதா, மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் முனுசாமி மீது திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், முனுசாமி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முனுசாமியை பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு முனுசாமியைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்த பிளேடையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு முனுசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.