புதுச்சேரியில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மாநில அந்தஸ்து கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால் மாநில அந்தஸ்து பெற நீதிபகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதலமைச்சர் கூறியுள்ளது புரியாத புதிர். நீதிபதிகள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைதான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு எந்த கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார். அதேநேரத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் மனு தரும்போது, பாஜக தரப்பு தேவையில்லை என்பது முரண்பாடானதாக உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசு நிதி குறையும் என்பது தவறான கருத்து. அத்துடன் மத்திய அரசு தற்போது ரூ.1,721 கோடிதான் தருகிறது. 2022-23 நிதியாண்டில் புதுவைக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி தந்ததாக பாஜக-வால் நிரூபிக்க முடியுமா? பொய் பிரசாரம் செய்வதற்கு பத்மஸ்ரீ விருதை பாஜகவுக்கு தரலாம். உண்மையில் ஆட்சியிலுள்ள ரங்கசாமியும், என்.ஆர்.காங்கிரஸும், பாஜகவும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஐ.டி, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளை தங்களின் கைப்பாவையாக வைத்திருப்பதுபோல் நீதிமன்றங்களையும் கைப்பாவையாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதன் வெளிபாடுதான் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்க வைக்க முயற்சிப்பது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செயல்பாடு கொலிஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்றங்களை விமர்சிக்கும் பணியை, பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் மூலம் செயல்படுத்துகிறார். தற்போது உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் 90% வழக்குகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவை.

தற்போது நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு பிரதிநிதிகள் இடம் பெறுவது எப்படி சரியாகும்? இது ஜனநாயகத்துக்கு எதிரானது. புதுவை அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தற்போது பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் எடுப்போர் 13% கமிஷன்கொடுக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. ஏற்கெனவே கலால், உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் வாய்திறக்கவில்லை” என்றார்.