தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி எருதாட்டம், மஞ்சு விரட்டு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி தடங்கம் கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அதேபோல் 2வது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. தடங்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, பிஎம்பி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தர்மபுரி மாவட்ட தலைமை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், நடத்தப்பட்ட இந்த போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் மொத்தம் 750 காளைகள் பங்கேற்றுள்ளன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடக்கிறது.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், அண்டா, வாட்ச், மின்விசிறி, குத்துவிளக்கு, சேர், குக்கர் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சார்பில் தங்கநாணயங்கள் வழங்கப் பட்டன. அதிக காளைகளை பிடிக்கும் வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு பைக் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். இதையொட்டி தர்மபுரி ஏடிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.