ஆம்பூர்: ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ, தோல் தொழிற்சாலைகளில் 3 நாட்களாக நடந்த ஐடி ரெய்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியா ஷூ தொழிற்சாலையில் கடந்த 19ம்தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக அருகிலுள்ள மற்றொரு ஷூ தொழிற்சாலை, ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
14 பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் முடிவுக்கு வந்தது. அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிக்கொண்டு விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொம்மேஸ்வரத்தில் உள்ள 2 ஷூ தொழிற்சாலைகளில் தலா 5 பேர் வீதம் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதையடுத்து நேற்று மாலை 6.15 மணியளவில் சோதனை நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து 3 நாட்கள் நடந்த சோதனையில் தொழிற்சாலைகளில் உள்ள அலுவலகத்தில் இருந்து முக்கிய பைல்கள், கடந்த ஆண்டுகளின் வருமான வரி தாக்கல், மின்கட்டணம், தொழிலாளர்களுக்கான சம்பளம், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து மேலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.