சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, கட்டணங்களை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும்.
குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும், முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லையெனில் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்து வாரிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் வருவாய் வசூல் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜப்தி செய்யப்படும்.
வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும்தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்துவேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும். https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்திலும் செலுத்தலாம்.