சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய மறு சீரமைப்பு கோரிக்கை: 8 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய மறு சீரமைப்பு தொடர்பாக சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்துடன் (SISMA) செய்து கொண்ட ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவ்வப்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைப் பணியாளர்களின் கோரிக்கை: கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 2,346 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 30.09.2018 உடன் காலாவதியான நிலையில், 01.10.2018 முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு, பல்வேறு தொழிற் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு: கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பான நீண்ட நாள் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலித்து, இச்சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்வதற்காக, சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதற்கான அரசாணையினை கடந்த 10.01.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இக்குழுவில் நிதித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தைச் சார்ந்த ஏழு அலுவலர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகள் (Terms of Reference)

  • சர்க்கரை ஆலைப் பணியாளர்களின் நலனுக்காக அரசு அமைத்துள்ள ஊதிய திருத்தக் குழு கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளும்.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தினை அமல்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் சங்கங்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறியும்.
  • மேலும், தற்போதைய விலை உயர்வு, இப்பணியாளர்களின் கொள்முதல் திறன், பணவீக்கத்தை ஆய்வு செய்வதுடன், இப்பணியாளர்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தையும் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரையினை அரசுக்கு சமர்ப்பிக்கும்.
  • கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தற்போதைய கரும்பு அரவைத் திறன், ஆலைகளின் திறன் இடைவெளியை கண்டறிந்து, ஆலைகளுக்குத் தேவையான திறமை வாய்ந்த மனிதவளம், ஆலையின் நீண்டகால செயல்பாட்டுக்குத்
  • தேவையான குறைந்தபட்ச மனிதவளம், அதிகபட்ச செயல்திறனை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும்.

கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் பணியாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஊதிய திருத்தக் குழு விரைவில் தனது பணியை துவக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.