நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதியின் 7 வயது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அண்மையில், பள்ளி முடிந்து வீட்டுக்குத் தனியாக நடந்து சென்றிருக்கிறார். இதைப் பார்த்த வடமாநில இளைஞர்கள் இருவர், தவறான நோக்கத்துடன் சிறுமியைத் தூக்கிச் சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். பதறிய சிறுமி பயத்தில் அலறித் துடித்திருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டிருக்கின்றனர். மக்களைக் கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.
இது குறித்து, சிறுமியின் தந்தை ஊட்டி ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அழைத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர்களை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து தெரிவித்த போலீஸார், “ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணா ஓரான், பாபுலான் ஓரான் ஆகிய இருவரும் தனியார் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்திருக்கின்றனர். அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர்.

மதுபோதையில் இருந்த இருவரும் 7 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இருவர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.