வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இயற்கை அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாதல்லவா! அது போல மலர்களை விரும்பாத மானிடன் இருக்க முடியாது. அத்தகைய மலர்களைக் கொண்ட Royal Botanical Gardens பற்றிக் கூறுவதே இந்த கட்டுரையின் நோக்கம். Royal Botanical Gardens அமைந்துள்ளது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் என்ற ஊரில் தான்.
கனடா வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி கண்டு களிப்பது நயாகரா நீர்வீழ்ச்சியைத் தான். கனடாவில் அதிக மக்கள் வாழும் ஊர் நான் வசிக்கும் டொராண்டோ மாநகரம். நயாகரா நீர்வீழ்ச்சிக்கும் டொரோண்டோ விற்கும் சரியாக பாதி தூரத்தில் அமைந்துள்ள நகரம் தான் இந்த பர்லிங்டன் (Burlington).

இந்த நகரத்தின் பெயரைக் கேள்விப் பட்டது கூட இல்லை என உங்களில் பலர் முணுமுணுப்பது என் காதுகளில் ஒலிக்கிறது. ஏன் என்றால் 8 வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவிலிருந்து கனடா வந்திருந்த போது எங்களைக் காண வந்திருந்த விருந்தினர் Burlington ல் இருந்து வந்ததாக கூறிய போது எனக்கும் அதே எண்ணம் தான் தோன்றியது.
அன்று பர்லிங்டனில் இருந்து வந்த விருந்தினர், இந்தியா வந்திருந்த போது பெங்களூரில் எங்கள் இல்லத்திற்கு வந்து ஆசையாக வாழை இலையில் தமிழக உணவை விரும்பி கைகளால் சாப்பிட்ட காட்சியும் என் கண் முன் தோன்றியது.

தமிழகம் வந்திருந்த இந்த கனடா நாட்டுப் பெண்மணி தஞ்சை பெரிய கோவில் பற்றியும், வாழை இலை விருந்தோம்பல் பற்றியும், நமது தமிழ்க் கலாச்சாரம் பற்றியும் மிகவும் சிலாகித்துக் கூறியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. அவர் Burlington பற்றிக் குறிப்பிடும் போது உங்கள் திருச்சியைப் போலப் பழமை வாய்ந்த நகரம் இல்லை எனவும், ஆலயங்கள் எல்லாம் இங்கு கிடையாது எனவும், மக்கள் கூட்டம் அலை மோதாது எனவும் திருச்சியை நினைவு கூர்ந்து நகைச்சுவையாக கூறினார்.
ஆனால் Burlington ல் பூங்காக்களும், ஏரிக்கரையும் காண மனதிற்கு அமைதியாகவும் ரம்மியமாகவும் இருக்கும் எனக் கூறினார்கள். Burlington வர அன்பான அழைப்பு ஒன்று இதயப்பூர்வமாக விடுத்தார்கள்.
நயாகரா நீர்வீழ்ச்சியை காணச் செல்லும் போது அல்லது அங்கிருந்து டொரோண்டோ திரும்பிச் செல்லும் போது Burlington வருகை புரியுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த சமயம் நாங்கள் அமெரிக்காவிலிருந்து கனடா விஜயம் செய்தது 10 நாட்கள் மட்டுமே என்பதால் முக்கியமான இடங்களை காண்பதிலும், இவரைப் போன்ற நண்பர்களைச் சந்திப்பதிலும் நேரம் சரியாகி விட்டது. அதனால் Burlington செல்ல வாய்ப்பு கிட்டவில்லை.

நான் கனடா புலம் பெயர்ந்த பின்னர் கூட பல முறை Burlington நகரத்தைக் கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் அங்கு செல்ல வாய்ப்பு கிட்டவில்லை.
Burlington ஐ பற்றி தகவல் தேடிய போது Royal Botanical Gardens இருப்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கண்டு களிக்க கிளம்பினோம். Burlington செல்கையில் நாங்கள் கடந்து சென்ற நெடுஞ்சாலை பயணத்தைப் பற்றி அவசியம் குறிப்பிட்டுக் கூறியே ஆக வேண்டும்.

பலமுறை இந்த நெடுஞ்சாலைகளில் பயணித்திருந்தாலும் இன்று வரை என்னால் ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
ஒரே சீராகச் செல்லும் வாகனங்களையும் அங்குள்ள மேம்பாலங்களையும் காணக் கண் கோடி இருந்தாலும் போதாது. அத்தனை அழகு! இரவு நேரத்தில் வாகனங்களின் விளக்குகள் மற்றும் ஒளி சிதறல்களை காணும் போது கார்த்திகை தீபம் போல ஜொலிக்கும் அந்த அழகை எங்ஙனம் வர்ணிப்பது என்று என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை.

டொராண்டோவில் இருந்து இந்த அழகை ரசித்தவாறு செல்கையில் அரை மணி நேரத்தில் Burlington வந்து சேர்ந்தோம். Burlington செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகளும் உண்டு என்பதால் இங்கு வசித்துக் கொண்டு டொரோண்டோ வந்து வேலை பார்ப்பவர்கள் ஏராளம்.
நமது பெங்களூரிலுள்ள லால் பாக் Botanical Gardens பற்றி நம்மில் சிலர் அறிந்திருப்போமல்லவா! அதே போல Burlington ல் அமைந்துள்ளது தான் Royal Botanical Gardens என்றாலும், லால் பாக்-ஐ விடப் பல மடங்கு பெரியது.

Burlington ல் தொடங்கும் Royal Botanical Gardens ஹாமில்டன் வரை நீண்டு கொண்டே செல்கிறது. உங்களில் பலருக்கு ஹாமில்டன் பற்றி நான் எழுதிய பயண கட்டுரை ஞாபகம் இருக்கலாம்! இந்த Royal Botanical Garden ல் நாங்கள் சென்ற போது நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகளும் அங்கே பூத்திருந்த அழகான தாமரை மலர்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பல வண்ணங்களில் மலர்கள் பார்த்தது மனதிற்கு ரம்மியமாக இருந்தது. Rose Garden சென்று அங்கு பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா பூக்களை காணும் போது பெங்களூர் லால் பாக்-ல் அமைந்துள்ள Rose Garden நினைவுக்கு வந்தது.

வித விதமான செடிகள், தோட்டங்கள் என நடந்து செல்ல செல்ல எல்லை இல்லாமல் வந்து கொண்டே இருந்தது Royal Botanical Gardens. இங்கு தோட்டக்கலையை உற்சாகப்படுத்தும் வகையில் Gift அங்காடி ஒன்று வைத்து அங்கு விதைகளும், உரங்களும் விற்பனைக்கு வைத்துள்ளதோடு அவை அனைத்தையும் பற்றி விளக்கி கூறுகிறார்கள்.
கனடாவில் பருவ நிலைக்கு ஏற்ப காலங்கள் மாறும். குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் என மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். கனடா வாழ் மக்கள் மிகவும் விரும்பி ஆவலுடன் எதிர்பார்க்கும் காலம் வசந்த காலம் தான். கனடா வாழ் மக்கள் மட்டுமல்ல, கவிஞர் கண்ணதாசனுக்கும் விருப்பம் என்பதால் தான் “காலங்களில் அவள் வசந்தம்” எனப் பாடல் இயற்றியுள்ளார்.

இலையுதிர் காலத்தில் ஆல்கன்குவின் பூங்கா செல்வது வழக்கம் என்றால் வசந்த காலத்தில் மக்கள் அதிகம் செல்வது Royal Botanical Garden தான். செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் என்றால் Royal Botanical Garden அனைவருக்கும் நினைவுக்கு வரும். Cherry Blossoms எனப்படும் இந்த திருவிழாவையும் அவர்கள் பராமரிப்பையும் கண்டு ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியாது. அங்கங்கே மக்கள் அமர்ந்து செர்ரி பூக்களைக் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
நான் கோடைக் காலத்தில் இரு முறை Royal Botanical Garden சென்றிருந்தாலும் செர்ரி பூக்கள் காண்பதற்காக வசந்த காலத்தில் இன்னொரு முறை சென்று பார்த்தேன். எத்தனையோ முறை பர்லிங்டன் நகரைக் கடந்து சென்ற போதும் இவ்வளவு எழில் கொஞ்சும் பூங்கா இருப்பது எனக்குத் தெரிந்ததில்லை.

டொரோண்டோவில் வசிப்பவர்களும், கனடா வரும் சுற்றுலாப் பயணிகளும் ஒரு முறையாவது பர்லிங்டன் சென்று பார்க்கலாம் என்பது எனது கருத்து. குறிப்பாக வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களைக் கண்டு களிக்க நிச்சயம் Royal Botanical Garden செல்லலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.