ஐதராபாத்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்த போது நடந்த கலவரம் தொடர்பாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்புவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில், சர்ச்சைக்குரிய ஆவணப் படம் திரையிடப்பட்டது.
பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அளித்த புகாரின் அடிப்படையில், ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கச்சிபவுலி போலீசார் கூறுகையில், ‘பிபிசி ஆவணப்படமானது, ஒன்றிய அரசின் தடை உத்தரவு வருவதற்கு முதல் நாள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர் அமைப்பின் சார்பில் புகார் பெறப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் புகார்கள் வரவில்லை. அவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.