ரெஸ்ட்டாரெண்ட் துவங்கும் பிரியா பவானி சங்கர்

இன்றைய தேதியில் புத்திசாலித்தனமான நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். சின்னத்திரையில் செய்தி வாசித்து, டிவி தொடரில் நடித்த அவர் காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருந்த நேரத்தில் மேயாதமான் படத்தில் திடீர் நடிகையாக அவரது வாழ்க்கை திசை திரும்பியது. இன்றைக்கு மீடியம் பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நடிகை ஆகிவிட்டார்.

நடித்து சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய வீடு வாங்கி இருப்பதாக அறிவித்து காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். “எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரை பகுதியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டோம் அந்த கனவு நிறைவேறி இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் தற்போது புதிய ரெஸ்ட்டாரென்ட் தொடங்கி இருப்பதாக அறிவித்து உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரெஸ்ட்டாரெண்ட் வீடியோவை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் சொந்த உணவகம். இது எப்போதும் எங்கள் கனவாகவே இருந்தது. அது நனவாகும் நாள் நெருங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

நடிகையாக இருப்பதுடன் தொழிலதிபராகவும் மாறிவரும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.