சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ். ஜவுளி தொழில் செய்து வரும் இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.
இந்த வீட்டை கட்டிக் கொடுப்பதற்காக, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என்று கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி கதிர்ராஜ், ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட சுரேந்திரன், கதிர்ராஜ்க்கு வீடு கட்டி கொடுக்காமல் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக்கொண்டார்.
இதையறிந்த கதிர்ராஜ் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் சுரேந்திரன் மற்றும் அவரது மனைவி தீபா உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், ரூ.1 கோடிக்கு மேல் பண மோசடி நடந்திருப்பதால் இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு, கடந்த மாதம் 14-ந் தேதி சுரேந்திரன் மற்றும் மனைவி தீபா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் இரண்டு பேரையும் தேடி வந்த நிலையில், நேற்று போலீசார் சுரேந்திரனை கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுரேந்திரனின் மனைவி தீபாவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும், கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கியுள்ளனர். இருப்பினும், அவர் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.