வேலூர் கொணவட்டம் நெடுஞ்சாலையோரம் மூட்டை, மூட்டையாக குப்பைகள் வீச்சு: சுகாதார சீர்கேட்டை தடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மூட்டை, மூட்டையாக குப்பைகள் வீசப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி முழுவதும் தினசரி 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கின்றனர். அதிகளவிலான குப்பைகள் மாநகராட்சியில் சேகரிக்கப்படுவதால், திடக்கழிவு மேலாண்மை மையங்களில் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது.

வேலூர் பகுதிகளில் உள்ள கறிக்கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை பலர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க குழு அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து பிடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனாலும், வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுவதும் இன்று குப்பையாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், `கொணவட்டம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருக்கும் கழிவுகளை மூட்டைகளில் கட்டி வீசி விடுகின்றனர்.

இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அதை அகற்றாமல் உள்ளனர்.  வேலூர் மாநகராட்சி ஆரம்ப எல்லை பகுதியே இப்படி குப்பைகள் கொண்டு வரவேற்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டும் நபர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.