திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகிறது. ஆளுநர் ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் மற்றும் இந்துத்துவா கொள்கையை பற்றி பேசுவதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையை தமிழக ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் வாசித்து இருந்தார். இதனால் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்தத் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழக ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்ல ஸ்டாலின் அளித்த கடிதத்தை திமுக எம்பிக்கள் அடங்கிய குழு குடியரசு தலைவரிடம் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை அளித்த பொங்கல் விழா விருந்தை ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. பிறகு தமிழகம் என பேசியதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கமளித்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ரவியுடன் திமுக அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து விருந்தில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் நாளை குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் குடியரசு தின விழா விருந்து கலந்து கொள்ளுமாறு ஆளுநர் மாளிகை அழைப்பை விடுத்துள்ளது. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் ஆளுநரின் பொங்கல் விருந்து புறக்கணித்தது போல குடியரசு தின விழா விருந்தை திமுக புறக்கணிக்கமா…? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆர்.எஸ் பாரதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என பதில் அளித்துள்ளார்.