ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: ஜனாதிபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜனாதிபதி முர்மு தெரிவித்து உள்ளார்.

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நேற்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்.  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள  தொலைநோக்குப் பார்வை, நமது நாட்டை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அந்த காலகட்டத்தில்  இந்தியா ஒரு பெரிய ஏழை மற்றும் கல்வியறிவற்ற நாடாக இருந்தது. இப்போது உலக அரங்கில் அணிவகுத்து நிற்கும் நம்பிக்கைக்குரிய தேசமாக மாற்றப்பட்டுள்ளது.  நமது பாதையை வழிநடத்தும்  அரசியலமை சட்டத்தை உருவாக்கியவர்களின் கூட்டு ஞானத்தால் தான் இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது.

அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனாலும் காந்திஜியின் லட்சியத்தை நனவாக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.   இருப்பினும், அனைத்து துறைகளிலும் நமது முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது . ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வளவு பரந்த மற்றும் பலதரப்பட்ட மக்கள் ஒரே தேசமாக ஒன்றிணைவது முன்னெப்போதும் இல்லாதது . நாம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற நம்பிக்கையுடன் இணைந்துள்ளோம். பல மதங்கள் மற்றும் பல மொழிகள் நம்மைப் பிரிக்காமல், அவை நம்மை ஒன்றிணைத்ததால் ஒரு ஜனநாயக  குடியரசாக நமது நாடு வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் உரையாற்றி உள்ளார்.

தேசிய கல்விக்கொள்கை இந்த காலத்திற்கு முக்கியம்
புதிய தேசியக் கல்விக் கொள்கை 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர் கூறும்போது,’ பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளது. கல்வி இந்த நோக்கத்திற்கான சரியான அடித்தளத்தை உருவாக்குகிறது. அதற்காக தேசிய கல்விக் கொள்கை லட்சிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரமளிக்கும் கருவியாகவும், உண்மையை ஆராய்வதற்கான ஒரு கருவியாகவும் உள்ளது. இந்தக் கொள்கையானது நமது பாடங்களை சமகால வாழ்க்கைக்கு பொருத்தமானதாக மாற்றுகிறது. அதே நேரத்தில் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு கற்பவர்களை தயார்படுத்துகிறது. கற்றல் செயல்முறையை விரிவுபடுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கை தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.