கிருஷ்ணகிரி: அனுமதியின்றி வீட்டிலேயே 24 மணி நேரமும் பார் நடத்தும் திமுக பெண் கவுன்சிலர்?

போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வரும் திமுக பெண் கவுன்சிலர் வீட்டிலிருந்து 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி போலீஸ் காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பட்டியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் எதிரில் உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சி நான்காவது வார்டு திமுக கவுன்சிலர் காஞ்சனா ராஜா என்பவரின் வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாகக் கூறி சகல வசதிகளுடன் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. திமுக கவுன்சிலர் காஞ்சனா ராஜா நேரடியாக விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
image
இந்நிலையில், சுமார் 200 மீட்டர் தொலைவில் வேலம்பட்டி அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அதேபோல், போச்சம்பள்ளி சந்தூர் வேலம்பட்டி வழியாக காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 1000-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பார் நடக்கும் பகுதியை கடந்து செல்கிறது. இந்நிலையில் திமுக கவுன்சிலர் வீட்டில் 24 மணி நேரமும் கள்ள சந்தை மது விற்பனை செய்வதால் பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைப்பதுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் போலீசார், உரிமம் இன்றி பார் நடத்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றது. அதேபோல் சந்தூர் சந்திப்பு சாலையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அனுமதி பெறாத பார் செயல்பட்டு வருகிறது. அதிகாலை முதல் மது குடிப்போர் அனுமதி பெறாத பார்களில் மது வாங்கி அருந்தி வருகின்றனர். மத்தூர் பகுதியில் அனுமதி பெற்ற பார்களில் அதிகாலை முதல் மது விற்பனை நடந்து வருகிறது. இதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
image
இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஐயப்பன் அவர்களிடம் கேட்டபோது, “வேலம்பட்டி பகுதியில் டாஸ்மாக் பார் அனுமதி யாருக்கும் கொடுக்கப்படவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து நேற்றிரவு கவுன்சிலர் நடத்தும் பார்-க்கு சென்ற நாகரசம்பட்டி காவல் துறையினர் அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்பளை பறிமுதல் செய்து கவுன்சிலரின் கணவர் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.