கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

திருவள்ளூர்: கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (25.01.2023) திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்து, எல்லை கற்களை நட்டார். அதனை தொடர்ந்து நில அளவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய குழுத் தலைவர்களான 20 மண்டலங்களின் நில அளவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நற்சான்றிதழ்களை வழங்கி  பேசியதாவது,

‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பு 5,42,429.32 ஏக்கர் ஆகும், இதில்  வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துபோகும் நிலங்களின் பரப்பு 3,43,000 ஏக்கர் ஆகும். மீதியுள்ள நிலங்களின் பரப்பு 1,99,429.32 ஏக்கர் ஆகும்.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உரிமம் பெற்ற நில அளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 மண்டல இணை ஆணையர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பணி அமர்த்தப்பட்டனர்.  

கடந்த 08.09.2021 அன்று சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் DGPS (Differential Global Positioning System) கருவியின் மூலம் முதன் முதலாக நில அளவை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. எல்லைக் கற்களை அனைத்து இடங்களிலும் ஒரே வடிவத்தில் அமைத்திடும் வகையில் சிமெண்ட் பில்லர்களை தயாரித்து, அதற்கு வெள்ளை நிற வர்ணமும், அப்பில்லரின் ஒரு பக்கத்தில் HRCE என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற வர்ணமும் தீட்டி அளவிடப்பட்ட நிலங்களில் பில்லர்கள்  நடப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம், அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 972 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யப்பட்டதன் மூலம் முதற்கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு 1,00,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்து, இன்றைய தினம் 1,00,001 ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்து எல்லை கற்கள் நடப்பட்டது.

திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இயற்றை இடர்பாடுகளுடைக்கிடையே சிறப்பாக பணியாற்றி இறைவனின் சொத்துக்களை காப்பாற்றியும், அடையாளம் காட்டியும், எல்லை கற்களை நட்டு பாதுகாத்து இருக்கின்ற 172 நில அளவர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பாராலட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பணி மிக பெரிய பணியாகும். அதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 172 நில அளவர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.2,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் பிப்ரவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் என்பதை 2 லட்சம் ஏக்கராக அளவீடு செய்து உயர்த்தி காட்டுங்கள்.

உங்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, 172 நில அளவையர்களையும், இவர்களுக்கு குழுவாக இருந்து செயல்பட்ட 20 மண்டலத்தைச் சார்ந்த மண்டல தலைவர்களையும் மனதார பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

நில அளவை பணிகளுக்கு முழு அடித்தளம் அமைத்து வித்திட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதற்குண்டான ஒப்புதலை பெற்று செயல்படுத்திட்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டு இருக்கின்றேன். இப்பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுபினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நிலங்கள்) கோ. விஜயா, இணை ஆணையர் சி.லட்சுமணன், உதவி ஆணையர் கே.சித்ராதேவி, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.