திமுகவில் மீண்டும் அழகிரி: டிவிட்டரில் போட்ட பதிவால் திமுகவினரிடையே குழப்பம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு கட்சி தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பதால், அவர் எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த மு.க.அழகிரி உட்கட்சி பூசலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய ஆதரவாளர்களும் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு தீவிர அரசியில் இருந்து விலகியிருந்த அழகிரி, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் அவர் தீவிரம் காட்டவில்லை. அண்மையில் மதுரை சென்றிருந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திடீரென மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், அமைச்சரான பிறகு முதன்முறையாக மதுரைக்கு வருவதால் பெரியப்பாவை சந்தித்து ஆசி பெற வந்தேன் என தெரிவித்தார். அப்போதே அவரிடம் மீண்டும் மு.க.அழகிரி திமுகவில் இணைவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி, ” நான் கட்சியில் இல்லை. பெரியப்பா என்ற முறையில் என் தம்பி மகன் உதயநிதி வந்து என்னை சந்தித்து ஆசி பெற்றிருக்கார். அவர் அமைச்சரானது மகிழ்ச்சி. நான் திமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்தார். அப்போது முதலே அழகிரியின் என்டிரி குறித்து திமுகவில் பேச்சுகள் எழத் தொடங்கியது. அவர் எப்போது வேண்டுமானாலும் திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்றும் கூறப்பட்டது. தலைமையில் இருந்து கிரீன் சிக்னல் சென்ற பிறகே உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்தாகவும் கூறப்பட்டது. ஸ்டாலின் அறிவுரை இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்திருக்கமாட்டார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், மு.க.அழகிரி திமுக கொடியுடன் டிவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ” ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம்… ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவில் தன்னுடைய மறுபிரவேசத்தை அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவில் இணையலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால், எப்போது என்பதை மட்டும் திமுக தலைமை அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.