சென்னை: திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு 4500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.
திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட 23 அணிகள் உள்ளன. இந்த அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் உள்ளனர். இதற்கிடையே, திமுக உட்கட்சித் தேர்தல் முடிவுற்று, தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 23 அணிகளின் மாநிலசெயலாளர்கள், தலைவர்கள்பொறுப்புக்குத் தகுதியானவர்களை திமுக தலைமை நியமித்து அறிவித்தது.
அதன்பின், அணிகளின் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டம், பகுதி, வட்ட அளவிலும் தகுதியானவர்களை அணிகளுக்கு அமைப்பாளர்களாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு பதவிகள்கிடைக்கும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து அனைத்து அணிகளிலும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் தொடங்கியுள்ளது. குறிப்பாக விண்ணப்பங்கள் பெற்று, நேர்காணல் மூலம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அமைப்புரீதியான 72 மாவட்டங்கள்
அந்த வகையில், சமீபத்தில் மாணவரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது. இ்ந்நிலையில், இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அன்பகத்தில் நேற்று தொடங்கியது.
முன்னதாக, திமுக அமைப்புரீதியாக செயல்பட்டுவரும் 72 மாவட்டங்களில் இருந்தும் 4500-க்கும்மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.
இதையடுத்து, வரும் 30-ம் தேதி திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட அமைப்பாளர்களுக்கான நேர் காணல் நடைபெற உள்ளது.