புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர்.
ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றபோதிலும் பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்து அதிர்ச்சியூட்டியது.
இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்பு மற்றும் மேயர், துணை மேயர் தேர்தலுக்காக புதிய மாமன்ற கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி கூடியது. அப்போது ஏற்பட்ட அமளியால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று காலைமீண்டும் கூடியது. அவையின் தற்காலிக தலைவராக டெல்லி துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக உறுப்பினர் சத்ய சர்மா, நியமன உறுப்பினர்களை முதலில் பதவியேற்க அழைத்தார். இதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியியில் நியமன உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து பாஜகஉறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் முழுக்கமிட்டனர். இதனால் பாஜக – ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் டெல்லி மாமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி மேயர், துணை மேயர்தேர்தலில் அவையின் 250 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தவிர, டெல்லியை சேர்ந்த பாஜகவின் 7 மக்களவை உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்ட 14 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.