பேஸ்புக் மூலம் கடல் கடந்து உருவான காதல் 48வயது வெளிநாட்டு பெண்ணுடன் 62 வயது போதகர் டும்…டும்…டும்… வீட்டில் கதவை பூட்டி சிறை வைத்த உறவினர்கள்

குளச்சல்: குமரியில் தனிமையில் இருந்த 62 வயது மத போதகர், பேஸ்புக் மூலம் பழகிய இந்தோனேசியா பெண்ணை மணம் முடித்தார். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண்ணை வீட்டில் சிறை வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62). மத போதகர். திருமணம் செய்யாமல், வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்தார்.

இவருடன் வசித்த தாயார் ஒன்றரை ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின், போதகர் தனிமையை உணர தொடங்கினார். இந்நிலையில் அவருக்கு பேஸ்புக் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா மேமி (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பேஸ்புக் மூலம் நட்பாக பேசிவந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து கடந்த டிசம்பர் 21ம் தேதி திபோரா மேமியை, இந்தோனேசியாவில் இருந்து நாகர்கோவில் வரவழைத்து அங்குள்ள தேவாலயத்தில் கிறிஸ்டோபர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 பின்னர் வீட்டுக்கு அழைத்துவந்தபோது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திபோரோ மேமியை இந்தோனேசியாவுக்கே திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தினர். ஆனால் கிறிஸ்டோபர் அதை ஏற்க மறுத்து அவருடன் தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிறிஸ்டோபர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார்.

அப்போது வீட்டுக்கு வந்த உறவினர்கள் திபோரோ மேமியை  ஒரு அறையில் அடைத்து பூட்டி சிறை வைத்தனர். திரும்பிவந்த கிறிஸ்டோபரை வீட்டுக்குள் விடாமல் தடுத்து முன்பக்க கேட்டையும் இழுத்து மூடினர். வீட்டுக்குள் இருந்த திபோரா மேமி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் வெளிநாட்டு பெண்ணை உடனடியாக விடுவிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். அதன்பிறகே உறவினர்கள் கேட்டை திறந்தனர். இதையடுத்து உறவினர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.