பெங்களூரு, பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேம்பாலத்திலிருந்து, ரூபாய் நோட்டுகளை கீழே வீசி எறிந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கே.ஆர்.மார்க்கெட் என்ற பகுதியில் மேம்பாலம் உள்ளது. நேற்று காலை இந்த மேம்பாலத்துக்கு வந்த ஒரு இளைஞர், தான் வந்த இருசக்கர வாகனத்தை ஓரத்தில் நிறுத்தினார்.
அந்த இளைஞர் கோட் அணிந்திருந்ததுடன், சுவரில் மாட்டும் கடிகாரத்தை தன் கழுத்தில் அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்டார். மேம்பாலத்தின் ஓரத்துக்கு சென்ற அவர், கையில் வைத்திருந்த பையில் இருந்து, 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து, பாலத்துக்கு கீழே சென்ற மக்கள் மீது வீசி எறிந்தார்.
இதனால், பாலத்துக்கு கீழே வாகனங்களில் சென்றவர்களும், பாதசாரிகளும் பரபரப்பு அடைந்தனர். கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை வேகமாக எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, மேம்பாலத்தில் வாகனங்களில் சென்றவர்களும், அவற்றை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பணத்தை தங்களுக்கு தரும்படி அந்த இளைஞரிடம் ஓடினர். ஆனால், அந்த இளைஞர் மொத்த பணத்தையும் கீழே வீசி எறிந்து விட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால், அந்த இளைஞர் யார் என அடையாளம் காண முடியவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இளைஞரை தேடி வருகிறோம். வித்தியாசமான தோற்றத்தில் அவர் வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர், 3,000 ரூபாய் மதிப்புள்ள, 10 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததாக தெரியவந்துள்ளது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement