இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் – ஓபிஎஸ்

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல்

பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

இந்நிலையில், ஆளுங்கட்சியாக திமுக இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தரப்பில் எடப்பாடி அணி போட்டியிடும் என்று கூறி பாஜகவிடம் ஆதரவு கோரி வந்தது. இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் செங்கோட்டையன் தலைமையில் 106 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனை தொடர்ந்து இன்று ஈரோடு அருகே தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன்
எடப்பாடி பழனிசாமி
ஆலோசனை நடத்தி வருகிறார். நாளைய தினம் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு பகுதியில் முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம்
அவரது குலதெய்வ கோயிலான வன பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தான் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்தார். மேலும் தனது சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும், வேட்பு மனுவே 31 ஆம் தேதி முதல்தான் துவங்க உள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.