ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பாப்பநத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி. இவர், `ராமநாதபுரத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க அழைத்து செல்வீர்களா?’ என பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுள்ளார். `நம்முடைய பள்ளியில் கொடி ஏற்றி இனிப்புகள் கொடுப்போம், அங்கு அழைத்துச் செல்ல மாட்டோம்’ என கூறியுள்ளனர்.

இதையடுத்து தன் பெற்றோரிடம் ராமநாதபுரத்திற்கு குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்க அழைத்துச் செல்லுமாறு அடம் பிடித்துள்ளார். ஆனால் தாங்கள் வேலைக்குப் போக வேண்டும் எனக் கூறி அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் கவலை அடைந்த மாணவி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, ‘குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்க வேண்டும், டி.வி.யில் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை பார்த்திருக்கேன். ஒரு தடவையாவது நேர்ல பார்க்கணும்னு ஆசையா இருக்கு. என்ன கூட்டிட்டு போக சொல்லுங்க சார் ப்ளீஸ்…’ எனக் கடிதம் எழுதியுள்ளார்
மாணவியின் கடிதத்தை படித்த ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், ராமநாதபுரத்தில் குடியரசு தின விழாவை காண காரில் அந்த மாணவியை அழைத்து வரவேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியை காண ஐந்தாம் வகுப்பு மாணவி ஜான்சிராணியை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் காரில் அழைத்து வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அந்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் அமரும் இருக்கையில் அமர வைத்து நிகழ்ச்சி முழுவதையும் பார்க்க வைத்தார். பின்னர் விழாவில் மாணவி ஜான்சிராணிக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து, மீண்டும் காரில் அனுப்பி வைத்தார்.
குடியரசு தின விழாவை நேரில் பார்க்க வேண்டும் என கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.