சென்னை: குடியரசு தினத்தையொட்டி, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது.
உலகின் பழமையான ரயில் இன்ஜின் ‘இஐஆர்-21’. இங்கிலாந்தில் 1855-ல் தயாரிக்கப்பட்ட இது 167 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1909-ம் ஆண்டு வரை இந்தியாவில் இது பயன்பாட்டில் இருந்தது. பின்னர், ஜமால்பூர், ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிக பழமையான ரயில் இன்ஜினான இது, தற்போது சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படுகிறது.
இதன்படி, குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பழமையான நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தொடங்கிவைத்தார். இதில் ரயில்வே அதிகாரிகள் பயணம் செய்தனர். உலகின் பழமையான இந்த ரயிலை வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.