குட்கா – பான் மசாலா பொருட்களை தடை செய்வதற்கு, உரிய தடை சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தான் தமிழக அரசு இதன் மீதான தடையை நீட்டித்துக் கொண்டே வந்தது.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது, முறைப்படுத்துவது பற்றி தான் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், முழு தடை விதிக்க சட்டத்தில் வழிவகை இல்லை எனவும் உயர் நீதிமன்றம் இந்த ஆணையை ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே கஞ்சா – சாக்லேட்கள் மற்றும் போதைப் பொருட்கள் சரளமாக விநியோகிக்கப்பட்டு சமூகத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவு பெரும் பாதிப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வாழ்க்கையை நாசமாக்கும் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் மீது முழு தடை விதிக்க தேவையான சட்டத்திருத்தங்களை தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் அவசரமாக நிறைவேற்றிட வேண்டுமென சிபிஐ (எம்) வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.