குலதெய்வ வழிபாடு… டிக் அடிக்கும் ஈபிஎஸ்; அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பும் வேட்பாளர்களை களமிறக்க தீவிரம் காட்டி வருவதால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தேர்தல் பணிக்குழு

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி வியூகம்

இந்த குழுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், எம்.பி.,க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன்,

குலதெய்வ கோயிலில் வழிபாடு

ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இன்று காலை நசியனூர் பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலான அப்பாத்தாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர்.

அவசர ஆலோசனை

இதையடுத்து ஈரோடு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓரிரு நாட்களில் அறிவிப்பு

இதையடுத்து பகுதி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பலரிடம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் முடிந்த பிறகு இன்று அல்லது அடுத்த ஓரிரு நாட்களில் அதிமுக சார்பில் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

இரட்டை இலை சின்னம்

இதன் தொடர்ச்சியாக வாக்கு சேகரிப்பில் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக 106 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு களப் பணியில் இறங்கிவிடும். எடப்பாடியை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிக்கவுள்ளது. இவர்கள் இருவரும் இரட்டை இலைக்கு போட்டி போடும் நிலையில் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும் நிலை உண்டாகும்.

அதன்பிறகு தனிச் சின்னம் ஒதுக்கப்பட்டு சுயேட்சைகளாக களம் இறங்க நேரிடும். காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ கை சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில், அதற்கு எதிரான சுயேட்சை சின்னம் எப்படி மக்கள் மத்தியில் எடுபடும் எனக் கேள்வி எழுகிறது. இந்த இடைத்தேர்தல் நிச்சயம் எடப்பாடி தரப்பிற்கு அக்னி பரீட்சை என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.