சென்னை: ஜூடோ ரத்னம் மறைவுக்கு அமைச்சர் சாமிநாதன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: இன்று மூத்த திரைப்பட சண்டை பயிற்சியாளரும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவருமான ஜூடோ ரத்னம் (வயது 94) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன். ஜூடோ ரத்னம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: தமிழ் திரையுலகத்தில் மூத்த சண்டை பயிற்சி கலைஞராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த ஜூடோ ரத்னம் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையை அடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்துகிறோம்.
தோழர் ஜூடோ ரத்னம் 1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர். தமிழ் திரையுலகத்தில் புகழ்பெற்ற முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்டு 12000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி மாஸ்டராக பணிபுரிந்து கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றவர்.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். தனது சிறுவயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக பெருமிதத்தோடு அறிமுகம் செய்து கொள்ளும் பண்பாளர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கும், சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.