தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தவர்கள்: அதிமுகவை விளாசிய அமைச்சர்!

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக, மாணவரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் அமைச்சர் மஸ்தான் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக, மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமணன் துவக்க உரையாற்றினார். இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் கவிஞர் நன்மாறன் விளக்க உரையாற்றினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி கே.எஸ் மஸ்தான் கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகி ராமகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் பேசுகையில், “தமிழகத்தின் சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட 64 தீர்மானங்களில், 21 தமிழகத்திற்கு எதிரான தீர்மானங்கள். நான் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும்போது, நின்று வேடிக்கை பார்த்தார்களே இதுதான் எட்டப்பன் கதை.

ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மிக குறைந்த அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் பல்வேறு கட்ட வாக்குவாதங்களுக்கு பிறகு 100 கோடி மதிப்பீட்டில் தமிழக மக்களின் உயிர்களை காப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்வேறு ஊழல்களை செய்து, தமிழகத்தில் நிதி ஆதாரத்தை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். அதையெல்லாம் சரி செய்து தமிழகத்தின் முதல் சட்டமன்றத்தில் வரவு, செலவு கணக்குகளை அஞ்சாமல் வெளியிட்டவர் தமிழக முதல்வர். திராவிட மாடல் ஆட்சி எந்த மதத்தினருக்கும் விரோதமானது அல்ல, அனைவருக்காகவும் பாடுபடுவது தான் திராவிட மாடல்.

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடலை கூட அவர்களிடம் பெற்று தராத ஆட்சி அதிமுக ஆட்சி. திமுக பொறுப்பேற்று இதுவரை 288 பூத உடல்களை வெளிநாட்டில் இருந்து உறவினர்களிடம் பெற்றுத் தந்ததுதான் திராவிட மாடல், எனவே இந்தி திணைப்பை என்றும் எதிர்ப்போம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறும் மத்திய அரசு கீழ்த்தட்டு மக்கள் முன்னேறி வருவதற்கு தடையாக உள்ள நீட் தேர்வை ஏன் ரத்து செய்வது இல்லை என்று தான் கேட்கிறோம், தாய் பால் என்பது குழந்தைக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் எங்களுக்கு தாய் மொழி தமிழ் கூட.

ஹிந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஹிந்தி படித்தவர்கள் இங்கு தமிழ் நாட்டில் வந்து ஹோட்டல்கள், பல்வேறு நிறுவனங்களில் பணி புரிகிறார்கள்.

அமைச்சர் டீ கடைக்குச் சென்று டீ ஆற்றுகிறார் என்று விமர்சனம் வைக்கிறார்கள். எனக்கு தெரிந்த வேலையை நான் செய்கிறேன், அங்கு சென்று கழக நிர்வாகிகளை சந்திக்கிறேன், அங்குள்ள டீ மாஸ்டரை சந்தித்து அவருக்கு என்னுடைய கையால் டீ போட்டு தருகிறேன் இதற்கு ஒரு விமர்சனம்.

மார்ச் மாதத்திற்குள் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதிக்கு 100 கோடி அளவில் நிதி பெறப்ட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட அவை தலைவர் சேகர், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர்கள் ஒலக்கூர் சொக்கலிங்கம், மரக்காணம் தயாளன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன், துணைத் தலைவர்கள் ராஜாராம், பழனி, ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி. சின்னசாமி, நகர அவை தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி வீடூர் பிரகாஷ், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.