சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது.
2021-ல் ரூ.21 கோடி செலவில் அடையாறு ஆறு கடலில் சேரும் பகுதி முதல் திரு.வி.க பாலம் வரையிலான பகுதிகளை அகலப்படுத்தி தூர்வாரும் பணியை மேகொள்ள மாநில பொதுப்பணித்துறை முடிவு செய்து திட்டத்தை தயார் செய்தது. அடையாறு ஆற்றில் நீரின் போக்கு மற்றும் அது தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பகுதி சதுப்பு நிலங்களுக்கு அருகிலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் உள்ளதால், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை இது தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து மாநில கடலோர ஒங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு அனுப்பியது.
இந்நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு, கடலில் கலக்கும் இடம் வரை, அலையாத்தி தாவரங்கள் இருக்கும் இடம், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176.35 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரப்படவுள்ளது.