தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அடுத்த ஏளூர் அம்பேத்கர் நகர் புது காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க 1978 ஆம் ஆண்டு தனி நபரிடம் இருந்து 2.36 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை வாங்கியது. இந்த நிலத்தை இலவச வீட்டுமனையாக வழங்க வருவாய் துறை அரசு புறம்போக்கு நிலமாக மாற்றி உள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தக் காலணியின் வடகிழக்கு பகுதியில் சமுதாயக் கூடம் கட்டப்படும் என காலி நிலம் விடப்பட்ட நிலையில், அந்த விடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனவே தங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் தான் கட்ட வேண்டும் என்றும் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று குடியரசு தினமான அந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தங்களது கோரிக்கையை அரசு ஏற்காட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.