முதல் முறை மேடையில் கண்கலங்கிய அண்ணாமலை – எழுந்து நின்று கும்பிட்ட பெற்றோர்

கோவையில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரி நடந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை தனது பெற்றோரை குறித்தும், கல்லூரியில் சேர்ந்த நிகழ்வினை பற்றியும் விவரித்தபோது கண்கலங்கியது உருக்கமாக இருந்தது.

மேடையில் பேசிய அண்ணாமலை

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை பற்றி பேசுவதற்காக இல்லை. என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களை பற்றி பேசுவதற்காகத்தான். என்னுடைய தாய், தந்தை இங்கே வந்திருக்கிறார்கள், அவர்கள் வந்துள்ள முதல் மேடை இதுதான். எங்கு சென்றாலும்கூட இந்த கல்லூரி நாட்களை மறக்கமுடியாது. 2002 ஆம் ஆண்டில் இந்த கல்லூரியில் சேர வந்தபோது என் தந்தையுடன் ஒரு டிரங்க் பெட்டியுடன் வந்து நின்றேன்.

அப்போது என்னுடைய கிராமத்தில் இருந்து மூன்று பேருந்துகள் மாறி இங்கு வந்து நின்றோம். இந்த கல்லூரிக்கு வெளியே நின்ற போது என் தந்தையிடம் கூறினேன்; நாம் வந்த பாதை, நாம் எங்கிருந்து வந்தோம், நமக்கு இந்த கல்லூரி சரியாக இருக்குமா என்று கேட்டேன். ஆனால், சமூகத்தில் என்னை மனிதனாக மாற்றியது இந்த கல்லூரிதான்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் வந்த பாதையை மறக்காமல் இருக்க கற்றுக்கொடுத்தது இந்த கல்லூரிதான். இந்த கல்லூரிக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. எதை செய்தாலும் நாலு பேருக்கு நல்லதாக அமைய வேண்டும் என்பதுதான் இந்த கல்லூரியின் கொள்கை” என இவ்வாறு அண்ணாமலை பேசி நெகிழ்ந்தார்.

கரூரில் பிறந்த அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலம் கார்கலா நகரில் ஏசிபியாக பணியாற்றி வந்தார். பின்னர் 2015ல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். அதனை அடுத்து 2018 இல், தெற்கு பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பல முக்கிய சம்பவங்களில் அதிரடியான நடவடிக்கைகளால் அண்ணாமலை கர்நாடகாவின் சிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மே 2019 இல், போலீஸ் பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.