ராஜீவ் காந்தி கொலை வழக்கு: “விடுதலை பெற்றும் சிறப்பு முகாமில் வதைப்பதா?" – அரசுக்கு சீமான் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

சீமான்

தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் புழல் நடுவண் சிறையிலிருந்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 60 நாள்களுக்கு மேலாகியும் அங்கிருக்கும் அலுவலக அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே அறையில் சமைத்துக்கொண்டு, அங்கேயே தங்க வேண்டியிருப்பதால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு, ஆஸ்துமா நோய்க்கும் ஆளாகியிருக்கிறார் தம்பி ராபர்ட் பயஸ். சிறைகளில்கூட நடைபயிற்சி மேற்கொள்ளவும், உடற்பயிற்சி செய்யவும் வாய்ப்பிருக்கும்போது, முகாமில் அதற்கான அனுமதியோ, அங்கிருக்கும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்போ வழங்கப்படாது, மறுக்கப்பட்டு வருகிறது. முகாமில், ரத்தசொந்தங்கள் மட்டுமே பார்க்க முடியுமெனும் விதியிருப்பதால், தம்பிகள் மீது பற்றுகொண்ட தமிழ்ச்சொந்தங்களோ, இன உணர்வாளர்களோ சந்திப்பது முற்றிலும் தடைபட்டிருக்கிறது.

அவர்கள் விடுதலைபெற்றுவிட்டதாக அவர்களது குடும்பத்தினரும், உறவுகளும், உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களும் நம்பிக்கொண்டிருக்கையில், இன்றுவரை அவர்கள் சுவாசக்கற்றையே சுவாசிக்கவில்லை; சூரிய உதயத்தைக்கூடப் பார்க்கவில்லை என்பது சொல்லொணாத் துயரமாகும். சிறைக்குள்கூட தொலைபேசியின் வாயிலாகவோ, அலைபேசியின் வாயிலாகவோ வாரம் ஒருமுறை பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவார்கள். சிறப்பு முகாமுக்குள் அதற்கான வாய்ப்புமில்லை. இவ்வாறு சிறைத் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகளுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச மனிதஉரிமைகளும், பொதுவெளியும்கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், தம்பிகளை சிறையிலிருந்து விடுவித்து, அதனைவிடக் கொடுமையான சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதே மறுக்கவியலா உண்மையாகும்.

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம்

‘ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்’ எனப் பேசி, ‘ஈழத்தமிழர் எங்கள் ரத்தம்’ என முழக்கமிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின், ஈழச்சொந்தங்கள் வதைபடுவதை வேடிக்கைப் பார்ப்பது ஏற்கவே முடியாதப் பெருங்கொடுமையாகும். 32 ஆண்டுகளில் மொத்த இளமைக்காலத்தையும் சிறைக்கொட்டடிக்குள் தொலைத்துவிட்டு, உடலியல் சிக்கல்களோடும், மனஉளைச்சலோடும் வெளி வந்திருக்கும் அவர்கள் எஞ்சியிருக்கும் வாழ்க்கையையாவது வாழ வழிவிடுவதே மனிதநேயமாகும்.

ஆகவே, இந்த விவகாரத்தில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்புக் கவனமெடுத்து, சிறப்பு முகாமிலிருந்து அவர்களை மாற்றிடத்தில் தங்கவைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், அதற்கிடையே திருச்சி, சிறப்பு முகாமுக்குள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடுபிடிகளைத் தளர்த்தி, குறைந்தபட்சமாக சுதந்திரமான ஒரு பொதுவெளியை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, அவர்கள் விரும்பும்பட்சத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், சிறப்பு முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோமென எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.