மத்திய பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். 2024ல் மோடி அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இம்முறை பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு அனுகூலமான அறிவிப்புகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களை மனதில் வைத்து அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நிதி அமைச்சக பரிசீலனையில் உள்ளன.
பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம்
நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்குப் பலனளிக்கும் வகையில் பல்வேறு அரசுத் துறைகள் அனுப்பியுள்ள திட்டங்களை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரக்கூடும். மோடி அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, 2014ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிர்ணயித்த, வருமான வரி விலக்கு வரம்பான, 2.5 லட்சம் ரூபாயை, இதுவரை அரசு உயர்த்தவில்லை. இதனுடன், நிலையான விலக்கு 2019 முதல் ரூ.50,000 ஆக உள்ளது.
ஸ்டாண்டர்ட் டிடக்ஷனை அதிகரிக்க கோரிக்கை
பணவீக்கம் உயர் மட்டத்தில் இருக்கும் நிலையில், சம்பளம் பெறும் வகுப்பினருக்கு நிவாரணம் வழங்க வருமான வரி விலக்கு வரம்பு மற்றும் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டட் டிடக்ஷன் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். நிதியமைச்சரின் சமீபத்திய அறிக்கை, வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நடுத்தர வர்க்கத்தினரிடம் எழுப்பியுள்ளது. இந்தப் பிரிவின் அழுத்தம் குறித்து தனக்குத் தெரியும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.
‘நானும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள், ஆகையால், இந்த வகுப்பின் அழுத்தம் எனக்குப் புரிகிறது. நான் நடுத்தர வர்க்கத்தில் ஒருத்தியாக என்னைக் கருதுகிறேன், அதனால் எனக்குத் தெரியும்.’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
80சி -ல் 1.50 லட்சம் வரையிலான முதலீட்டில் விலக்கு
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த பிரச்சனைகளை நான் புரிந்துகொள்கிறேன். அரசு அவர்களுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறது. தொடர்ந்து செய்து வருகிறது. விலக்கு வரம்பு மற்றும் நிலையான விலக்கு ஆகியவற்றை மாற்றியமைப்பதைத் தவிர, 80C இன் கீழ் முதலீட்டு விலக்கு வரம்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.’ என்று தெரிவித்தார். இதில் ஆயுள் காப்பீடு, பிக்சட் டெபாசிட், பாண்டுகள், குடியிருப்பு மற்றும் பிபிஎஃப் மற்றும் பிற சேவைகள் அடங்கும். தற்போது, இதன் கீழ், 1.50 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தள்ளுபடி உள்ளது.
சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மூலதன ஆதாய வரி விதிகளையும் அரசாங்கம் எளிதாக்கலாம். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்குப் பலன் தரும்.