`அக்கினேனி குடும்பத்தை மரியாதை குறைவாக பேசினேனா?’- எதிர்ப்புகளுக்கு பாலகிருஷ்ணா விளக்கம்

மறைந்த பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து பேசியது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கிடையில் இந்தப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நாகர்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் பெயரைக் குறிப்பிட்டு, மரியாதை குறைவான விதத்தில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

image

அந்த விழாவின் மேடையில் அவர் பேசுகையில், “எனது தந்தை சீனியர் என்.டி.ராமராவ் பற்றியும், அவரது சமகால நடிகர்களான ‘ஆ ரங்காராவ் – ஈ ரங்காராவ், அக்கினேனி – தொக்கினேனி’ எனப் பலரை பற்றியும் நாங்கள் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்போம்” என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி: பாலகிருஷ்ணாவுக்கு எதிராக களமிறங்கிய `அக்கினேனி’ குடும்பம்! ஒற்றை பேச்சால் கிளம்பிய புயல்!

சமூகவலைத்தளத்திலும் இது பேசுபொருளானது. இதையடுத்து மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரனும், நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் தங்களது கண்டனங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். 

தெலுங்கு திரை உலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்பொழுதுமே போட்டி உண்டு. மேலும் இருவரும் நட்பாகவும் பழகிக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இவ்வறிக்கையை நாகார்ஜுனாவின் மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த விழாவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் பாபாய் என மூத்த உறவுமுறைபோல் அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரை அழைத்து, “சித்தப்பா (அக்கினேனி நாகேஸ்வரராவ்) என்னை அவரது சொந்த குழந்தைகளைவிட அதிகம் நேசித்தவர். எப்போதும் என் மீது அதிக பாசம் காட்டி வந்தவர். அதனால் அவர் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.