இந்து மக்கள் கட்சி பேரணிக்கு தடை; மாநாட்டுக்கு அனுமதி – ஐகோர்ட் ஆர்டர்!

கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாடு மட்டும் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி கடலூரில் வள்ளலார் 200வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29 ஆம் தேதி காலையில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும், மாலையில் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல் துறையில் இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவரான ஆர்.எஸ்.தேவா என்பவர் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மனு அளித்துள்ளார். இதனை பரிசீலித்த காவல் துறை பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. காவல் துறை உத்தரவை ரத்து செய்து எழுச்சி பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.தேவா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பேரணி நடத்த அனுமதி கோரும் ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சக்குப்பம் திடல் வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்றும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனை அமைந்திருப்பதாகவும், ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி சென்று வரும் பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் பிற மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால், பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார். அதே சமயம், மாநில மாநாட்டை மட்டும் ஜனவரி 29 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.