கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள மவுன்ட் கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து, மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சியில் ஏரிக்கரை மீது செல்லும்போது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கார்மெல் நகரில் உள்ள மவுன்ட் கார்மெல் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வந்து செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பள்ளி முடிந்து மாலை 40 மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சி நோக்கி சென்றுள்ளது. அப்போது வறண்ட நிலையில் இருந்த ஏரிக்கரையில் செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் 22 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ் பார்வையிட்டு முதலுதவி பணிகளை முடுக்கிவிட்டார். அந்த ஏரியில் தண்ணீர் ஏதுமின்றி வறண்டு இருந்தது.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் திரண்டுள்ளதால் பரபரப்பாக காணப்பட்டது.
தொடரும் பேருந்து விபத்து: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஏகேடி பள்ளிப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே விபத்துக்குள்ளானபோது, சுமார் 25 மாணவர்கள் காயமடைந்தனர். அதையடுத்து அதே பள்ளியைச் சேர்ந்த பேருந்து தெங்கியாநத்தம் செல்லும் சாலைப் பகுதியில் 9 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடரும் பள்ளி பேருந்துகளின் விபத்தால் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறைந்த ஊதியத்தில் போதிய அனுபவமற்ற ஓட்டுநர்கள் பணியமர்த்தியிருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாகவும், அதற்காக மாணவர்களின் உயிரில் விளையாடுவதா எனவும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.