டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது குறித்தான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் திரும்ப பெறப்படும் காலி மது பாட்டில்களை விற்பனை செய்து அதனால் ஈட்டப்படும் வருவாய் குறித்தான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த திட்டம் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.