சமீபத்தில் சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்ட `India: The Modi Question’ ஆவணப்படம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறி, விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படம், 2002-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியை விவரிக்கும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஆவணப்படத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த மோடி, கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்து, நடவடிக்கை மேற்கொண்டது.

இருப்பினும், மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரும், மாணவ அமைப்பினரும் பரப்பி வருகின்றனர்.
பல இடங்களில் கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, இந்த ஆவணப்படத்தைத் திரையிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட இந்த ஆவணப்படமானது சென்னை பல்கலைக்கழகத்தில் மடிக்கணினிகள் மூலம் திரையிடப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுமி மடிக்கணினியில் மோடி குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர், “சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும், இந்திய மாணவர் அமைப்பின் உதவியோடு பல்கலைக்கழக மாணவர்கள் மடிக்கணினியில் இந்த ஆவணப்படத்தைப் பார்த்தோம். எங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயலுக்கு இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். இங்கு மட்டுமல்ல, பல கல்வி நிறுவனங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதை நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும்” என்றார்.