டாஸ்மாக் கடைகளில் சூப்பர் திட்டம்: தமிழ்நாடு அரசை பாராட்டிய நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் திருப்தியளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விலைக்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது.

மேலும், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலியிடத்தை கண்டறிவது, ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அவசியம் உள்ளதால், பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இரு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள 163 கடைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் 78 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், வேலூரில் 98 சதவீதமும், திண்டுக்கல்லில் 91 சதவீதமுன், தர்மபுரியில் 99 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 98 சதவீதமும் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அரசுக்கு பாராட்டும் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை அடையாளம் காண க்யூ ஆர் கோடு முறையை பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

மேலும், திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவை, பெரம்பலூரில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்க அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.