டெல்லி: துபாயில் இருந்து நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக அன்றிரவு 9.45 மணியில் டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. விமானத்தில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் மாநிலம் நாகவுரைச் சேர்ந்த பயணி மோதி சிங் என்பவர், ‘விமானம் கடத்தப்பட்டது’ என்று டுவிட் செய்தார். இவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே சில மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் சென்றடைந்தது.
ஆனால், விமானம் கடத்தப்பட்டது என்று பதிவிட்ட நபர் யார்? என்பது குறித்து டெல்லி சைபர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பதிவை வெளியிட்ட குறும்புகார நபர் மோதி சிங்கை ஜெய்ப்பூரில் ேநற்று போலீசார் கைது செய்தனர். குடியரசு தினத்திற்கு முதல்நாள் விமானம் கடத்தல் என்ற பொய்யான பதிவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.