நாமக்கல் மாவட்டத்தை அடுத்த குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களே அதிகம் வேலை செய்து வருகின்றனர். எப்படை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 60,000 மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்ராசாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் நாட்டு துப்பாக்கியை கள்ளத்தனமாக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் சோதனை செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரு இளைஞர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் குமார் என்பதும் மற்றொருவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுதாகர் பஸ்வான் என்பதும் தெரியவந்தது. மேலும் நண்பர்களான இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு குடி பெயர்ந்ததால் தங்களின் முகவரியை தமிழ்நாட்டிற்கு மாற்றியுள்ளனர்.
இவர்களில் சதார் பஸ்வான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வரும் பொழுது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதை வைத்து வேலை இல்லாத நேரங்களில் வடமாநில இளைஞர்களை மிரட்டி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். வட மாநில இளைஞர்கள் அதிகம் உள்ளதால் அவர்களிடம் பணம் பறித்தால் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில வட மாநில தொழிலாளர்கள் துப்பாக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்துள்ளனர். வட மாநில இளைஞர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.